மின்விளக்கு அமைக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
விருத்தாசலம்: சிறுவரப்பூர் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்திட கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் மூலம் சிறுவரப்பூர், பெரியகோட்டிமுளை, சின்னகோட்டிமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, பெறுவரப்பூர், கிளிஞ்சல்மேடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.இங்கிருந்து விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சிதம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இரவு நேரத்தில் மின் விளக்கு வசதியின்றி இருளில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. பள்ளி, கல்லுாரி முடிந்து வரும் மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.தவிர, தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் தெரியாமல், சாலையை கடக்கும் கிராம மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, சிறுவரப்பூர் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் மற்றும் சோலார் விளக்குகள் பொறுத்த வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.