விருத்தாசலம் புதிய மாவட்டமாவது எப்போது?: அனைத்து தரப்பினர் எதிர்பார்ப்பு
விருத்தாசலம்:  விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து நகர்ப்புற மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்டது, விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விருத்தம் (பழைய), அசலம்  (மலை) என்ற இரு வடமொழி சொற்கள் இணைந்து, விருத்தாசலம் என அழைக்கப்படுகிறது. இதற்கு, திருமுதுகுன்றம், பழமலை என்ற தமிழ்ப் பெயர்களும் உள்ளன.விருத்தாசலம் நகர எல்லைக்குள் மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அரசு அச்சகம், வேளாண் அறிவியல் நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலையம், வணிக வரித்துறை, செராமிக் தொழிற்பேட்டை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு கருவூலம், அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.மேலும், திருச்சி - சென்னை மார்க்கத்தில், பிரதான ரயில் நிலையமாக இருப்பதால் கல்வி, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள்; மும்பை, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு  செல்ல வசதிகள் உள்ளது.விருத்தாசலம் நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து 17.1.1970 முதல் வயலுார், நாச்சியார்பேட்டை, கண்டியங்குப்பம், மணலுார், பூதாமூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி, மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1975 - 76ம் ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், முதலாம் நிலை நகராட்சியாகவும் அந்தஸ்து உயர்த்தப்பட்டது.ஆனால், இதுநாள் வரை விருத்தாசலம் நகராட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மணிமுக்தாற்றில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு, வீதிகள் தோறும் குப்பைகள், போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறாதது என மக்கள் பிரச்னைகள் நீள்கிறது. இதற்கு நகராட்சி நிர்வாகத்தில் போதிய நிதிவசதி இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிப்பதால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். மக்கள் அடிப்படை வசதிகள், பிரச்னைகளை சுலபமாக தீர்த்து வைக்க முடியும். மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு:
விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட சுற்றியுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் மன்ற தீர்மானம் நிறைவேற்றி, கடந்த ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தொடர் போராட்டங்கள்:
தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க போராட்டக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்கதனவேல் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், பொது மக்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து உண்ணாவிரதம், மனித சங்கிலி, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டங்களும் அரசின் கவனத்தை ஈர்த்தன. முதல்வர் வாக்குறுதி ;
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில், விருத்தாசலத்திற்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, பெட்டியில் பூட்டி எடுத்துச் சென்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், தலைமை செயலகத்தில் என்னை நேரில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.அந்தப் பெட்டியில், 50 சதவீத மனுக்கள், விருத்தாசலம் தனி மாவட்டம் கேட்டு கொடுக்கப்பட்டிருந்தன. வரும் 6ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில், தனி மாவட்ட அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கலெக்டர் ஆய்வு
வேப்பூரை தனி பேரூராட்சியாக மாற்றுவது மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் அருகிலுள்ள கர்னத்தம், கோவிலானுார், பள்ளிப்பட்டு கிராமங்களையும், பெண்ணாடம் பேரூராட்சியில் பெ.பொன்னேரி ஊராட்சியை சேர்ப்பது குறித்து சமீபத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதனால் சட்டசபை கூட்டத்தொடரில் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்புள்ளது என பொது மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.அதிக கிராமங்களுடன் பின்தங்கிய விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் வளர்ச்சி பெறவும், தொழில் வளம் அதிகரித்து, வேலை வாய்ப்புகள் பெருக தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும். இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.