| ADDED : டிச 04, 2025 05:22 AM
விருத்தாசலம்: சின்னவடவாடி சாலையில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் இருந்து சின்னவடவாடி செல்லும் 3 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலையின் குறுக்கே இரண்டு தரைப்பாலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த இரண்டு தரைப்பாலங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால், கிராம மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, சின்னவடவாடி சாலையில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.