ஒவ்வொரு நகரத்திலும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மார்க்கெட். சென்னை மூர் மார்க்கெட், கோவை காந்தி மார்க்கெட், அண்ணா மார்க்கெட் என ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மார்க்கெட் பகுதிகள் நகரத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றன. அதேபோல, கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பஸ்நிலையம் அருகிலேயே உள்ள பான்பரி மார்க்கெட், நுாற்றாண்டைக் கடந்து கடலுார் நகரத்தின் அடையாளமாக திகழ்கிறது. கடலுார் நகரம், கி.பி.,1746 முதல் 1752வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் தென்னிந்தியாவின் தலைநகராக விளங்கியது. ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்த நகராகவும் கடலுார் விளங்கியது வரலாற்றுக்குறிப்புகளில் உள்ளது. இதனால் கடலுார் நகரில் பாலங்கள், கால்வாய்கள், சாலைகள், கோட்டைகள் உட்பட பலவற்றை உருவாக்கி நகரை அழகுற கட்டமைத்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அவ்வாறு கடலுார் நகர மக்களின் நீண்ட கால தேவையை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்ட பான்பரி மார்க்கெட் 1865ம் ஆண்டில் கட்டப்பட்டது. இம்மார்க்கெட்டை உருவாக்க நிதித்தேவை உருவான போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கலெக்டராக பணியாற்றிய ஜார்ஜ் பான்பரி, தான் மிகவும் நேசித்த கடலுார் நகருக்காக தனது சொந்தப்பணம் 1,100 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டர்லிங் கொடுத்து மார்க்கெட் உருவாகக் காரணமாக இருந்தார். ஜார்ஜ் பான்பரி நிதியுதவியுடன், 150ஆண்டுகளுக்கு முன் கடலுார் நகராட்சியால் ரூ.34ஆயிரம் செலவில் இந்த மார்க்கெட் கட்டப்பட்டது. அவரின் நினைவாகத்தான், கடலுார் மார்க்கெட்டிற்கு பான்பரி மார்க்கெட் என்ற பெயர் நிலைத்து நின்றது. மார்க்கெட்டின் முகப்பில் மணிக்கூண்டுடன் அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவு கடந்த, 1911ம் ஆண்டு ஜார்ஜ் பான்பரி நினைவாக கடலுார் நகராட்சியால் கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் லாலியால் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய கடலுார் நகராட்சி தலைவர் சுப்பராயலு ரெட்டியார் உட்பட பலர் அவ்விழாவில் பங்கேற்றனர். பல ஊர்களில் திறந்தவெளியில் மார்க்கெட் இயங்கிவரும் நிலையில், 150ஆண்டுகளுக்கு முன்பே அதற்குரிய கட்டமைப்பை உருவாக்கிய ஜார்ஜ் பான்பரி, மார்க்கெட்டின் நுழைவாயிலில் கட்டப்பட்ட கோபுரத்தில் வைப்பதற்காக அழகிய கடிகாரம் ஒன்றையும் வழங்கினார். காலப்போக்கில் கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து சேதமடைந்தது. இதனால் கடந்த, 2023ம் ஆண்டு, கடலுார் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டிலுள்ள கடைகளை இடித்து அகற்றி ரூ.17கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டும் பணி துவங்கியது. ஆனால், அப்பணிகள் கிடப்பிலே போடப்பட்டதால் பழமையான மார்க்கெட் மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது. கடலுாரில் பழமையான நினைவுச்சின்னங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகம், பான்பரி மார்க்கெட் பணிகளை முடித்து, பழமை மாறாமல் முகப்பிலுள்ள மணிக்கூண்டையும் புனரமைக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.