எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்டு பணி தீவிரம்! பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி துவக்கம்
கடலுார்: கடலுார் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணி பொதுமக்கள், அரசியல் கட்சிகள்எதிர்ப்பையும் மீறி 8 கி.மீ., துாரத்தில் உள்ள எம்.புதுாரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கடலுார் லாரன்ஸ் ரோட்டில் தற்போது இயங்கி வரும் பஸ் ஸ்டாண்டு போதிய அளவு இட வசதி இல்லை. மாநாராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது.அதனால் இருக்கின்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள இடத்தை ஆர்ஜிதம் செய்து பஸ் ஸ்டாண்டு அமைக்குமாறு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் ஸ்டாண்டு அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு துவக்க விழாவும் நடந்தது.அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. பின், கடலுார் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.அ.தி.மு.க., தேர்வு செய்த இடத்தில் தி.மு.க., பஸ் ஸ்டாண்டு அமைப்பதா என்ற 'ஈகோ' நிலை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தகுதியான இடத்தை தேர்வு செய்ய வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.கடலுார் கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, எம்.புதுார், ஆகிய பகுதிகளில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என வல்லுனர் குழு சிபாரிசு செய்தது.இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடலுார் புதிய பஸ் ஸ்டாண்டு தற்போது இருக்கும் இடத்தில் விரிவாக்கம் செய்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எதிர் வரும் 10, 15 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் கூட்ட நெரிசலை தொலைநோக்கு பார்வையோடு கணக்கிட்டு தொலைதுாரத்தில் பஸ் ஸ்டாண்டு அமைப்பது மக்களுக்கு செய்யும் நன்மை என கூறிவிட முடியாது.தோழமை கட்சிகளான வி.சி., மா.கம்யூ., மற்றும் நலச்சங்கங்கள் என பல்வேறு அமைப்பினரும், அ.தி.மு.க., வும், பஸ் ஸ்டாண்டு தற்போது உள்ள இடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, பல கட்ட போராட்டங்களை நடத்தி ஓய்ந்தனர்.இதற்கிடையே புதிய பஸ் ஸ்டாண்டு அமைய உள்ள இடத்தை சுற்றிலும் வசதி படைத்தவர்கள் நிலத்தை வாங்கி குவித்து வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு, தோழமை கட்சிகள் போராட்டம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் மாநகராட்சி எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்டு மீண்டும் கட்டுமானப் பணியை துவக்கியது.அங்கே இருந்த மரங்கள் அகற்றப்பட்டு கட்டடம் எழுப்புவதற்கு மண் பரிசோதனை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து சுற்றுச்சுவருக்கு பதிலாக இரும்பு தகடு கொண்டு வேலி அமைக்கப்பட்டது. தற்போது அஸ்திவாரம் போடப்பட்டு, சிமெண்ட் பில்லர் எழுப்பப்பட்டு வருகிறது. விரைவில் கட்டடம் கட்டும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.