சாலைகளில் காய வைக்கப்படும் தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதி
சாலைகளில் காய வைக்கப்படும்தானியத்தால் வாகன ஓட்டிகள் அவதிபாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் துவரை சாகுபடி நடக்கிறது. தற்போது அறுவடை துவங்கி உள்ளது. இதை தார்ச்சாலைகளில் வெயிலில் காய வைக்கின்றனர். பின் அதை அடிப்பதற்காக சாலையிலே விட்டு விடுகின்றனர். அதன் மீது வாகனங்கள் சென்றால், துவரை தனியாக விழுந்து விடும். இதனால் பெரும்பாலும் விவசாயிகள் சாலையை தானிய பயிர்கள் அடிக்கும் களமாக பயன்படுத்தி வருகின்றனர். கடத்துார்,-- புட்டிரெட்டிப்பட்டி சாலை, குருபரஹள்ளி-- அரூர் சாலை, பொம்மிடி - -அரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், துவரை செடியை சாலையில் பரப்பி காய வைக்கின்றனர்.இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கார், உள்ளிட்ட கனரக வாகனங்களில் செல்வோர், துவரை செடிகள் மீது செல்லும் போது, வாகனத்தின் அடியில் துவரை சிக்கி, தீ பிடிக்கும் அபாயம் உள்ளது. நேற்று மதியம் குருபரஹள்ளி பகுதியில் பரப்பி காய வைத்த துவரை செடிகளால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமமேற்பட்டது. எனவே, சாலையில் தானியங்கள் காயவைப்பதை தடுக்க, வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.