| ADDED : ஜன 28, 2024 10:19 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், அருள்சுந்தரம் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் காமராஜ் துவக்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் கண்டன உரை ஆற்றினார். இதில், தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண், 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்தாண்டு, டிட்டோ - ஜாக் உயர் மட்ட குழுவுடன்நடத்திய பேச்சுவார்த்தையில் தெரிவித்த, 12 கோரிக்கைகளை எழுத்து பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநில துணைச்செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.