| ADDED : மார் 30, 2024 03:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 3வது வார்டு சமத்துவபுரம் பகுதியில், கோட்டைமேடு, அசோக் நகர் உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், குடிநீர் இல்லாமல் அருகில் உள்ள அதிகாரப்பட்டி ஊராட்சிக்கு சென்று எடுத்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க, குடிநீர் குழாய் அமைத்து, வழிவகை செய்யும்படி மாவட்ட கலெக்டர், பேரூராட்சி நிர்வாகம், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.கடந்த, 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, எனக் கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலை தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கையில் ஏந்தியும், தங்கள் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையெனில் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.