தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில், லாரி மோதி கார் தீப்பிடித்ததில், உடல்கருகி பலியான, ஒரே குடும்பத்தை சேர்ந்த, 4 பேர், குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவுக்கு சென்றபோது, இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.அரியலுார் மாவட்டம், கீழ்வரப்பன்குறிச்சையை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய முதல் மகன் வினோத்குமார், 36, குடும்பத்துடன் கோவையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் விமல்குமார், 28, கோவையிலுள்ள ஒரு தனியார் நகைக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெங்களூருவை சேர்ந்த அனுஷ்கா, 23; இவர்களுக்கு கடந்த, 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தங்களது சொந்த ஊரான கீழ்வரப்பன்குறிச்சியிலுள்ள மாதா கோவிலில் பெயர் சூட்டும் விழா வரும் ஞாயிற்றுகிழமை நடக்க இருந்தது. இதற்காக, கோவையிலிருந்து பெங்களூருவிலுள்ள அனுஷ்காவின் பெற்றோர் வீட்டுக்கு, கடந்த இரு தினங்களுக்கு முன், வினோத்குமார், அவர் மனைவி ஜெனிபர், 29, மகன் ஜெஸ்வின், 6, மகள் விஜயஷா, 2, தம்பி விமல்குமார், உறவினர் மஞ்சு, 56, ஆகியோருடன் காரில் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள், அனுஷ்கா மற்றும் அவருடையை குழந்தையை அழைத்து கொண்டு, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் வழியாக கீழ்வரப்பன்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.அன்று மாலை, 5:00 மணிக்கு, கார் தொப்பூர் இரட்டை பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்நாடகா மாநிலம், சிந்தானுாரில் இருந்து காங்கேயத்துக்கு நெல் லோடு ஏற்றிச்சென்ற லாரி, முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. அந்த லாரி அதற்கு முன்னால் சென்ற கெமிக்கல் மூட்டை ஏற்றிச்சென்ற லாரி மற்றும் வினோத்குமார் குடும்பத்தினர் வந்த கார் மற்றும் மற்றொரு கார் மீது மோதியது. இதில், கெமிக்கல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இடிபாடுகளில் சிக்கிய வினோத்குமார் குடும்பத்தினர் வந்த கார் மீது, நெல் லோடு ஏற்றி வந்த, லாரி மீண்டும் மோதியதில், காரும், லாரியும் தீப்பற்றின. அப்பகுதியில் இருந்தவர்கள், காரில் தீ காயத்துடன் இருந்த ஜெனிபர், லாரி டிரைவர்கள் ஸ்ரீதர், 26, ஸ்ரீகாந்த், 25, வினோத்குமார், அவரது மகன் ஜெஸ்வின், மகள் விஜயஷா, விமல்குமாரின், 3 மாத பெண் குழந்தையை மீட்டனர்.மேலும், விமல்குமார், அவர் மனைவி அனுஷ்கா, உறவினர் மஞ்சுவை மீட்க போராடியும், மீட்க முடியதால், மூவரும் தீயில் கருகி இறந்தனர். படுகாயமடைந்த ஜெனிபர், ஜெஸ்வின், விஜய்ஷா, விமல்குமாரின், 3 மாத பெண் குழந்தை, லாரி டிரைவர்கள் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் மற்றும் இரு லாரிகளின் டிரைவர்களான திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த சசிக்குமார், 43, அனிஷ், 35 ஆகியோரை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடம் வந்த தர்மபுரி தீயணைப்பு துறையினர், 2 மணி நேர போராட்டத்துக்கு பின் லாரி, காரில் பற்றிய தீயை அணைத்தனர். அதை தொடர்ந்து, தொப்பூர் போலீசார் நீண்ட போராட்டத்துக்கு பின், லாரியின் அடியில் சிக்கிய காரை மீட்டனர். இந்த விபத்தால் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து சேலம் மார்க்கமாவும், சேலத்தில், தர்மபுரி மார்க்கமாகவும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்த பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள், ஒரே பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், அப்பகுதியில், 8 மணி நேரத்துக்கு மேல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் தீயில் கருகிய லாரி மற்றும் காரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ள லாரியை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், விபத்து நடந்த தொப்பூர், இரட்டை பாலம் மற்றும் அதை ஒட்டிய சாலை பகுதிகளை நேற்று, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.