அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணக்காளர் பலி; உறவினர்கள் மறியல்
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரை சேர்ந்தவர் அண்ணாதுரை, 50. இவர், சேலம் அருகே கொண்டலாம்பட்டியிலுள்ள, லாரி அசோசியேஷன் அலுவலகத்தில், கணக்கராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை, 4:50 மணிக்கு வேலைக்கு செல்ல பூனையானுாரிலுள்ள வீட்டிலிருந்து, சேலம் செல்ல வெங்கடசமுத்திரம் 4 ரோட்டில் பஸ் ஏற பூனையானுார் - பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் நடந்து சென்றார்.சிவன் கோவில் அருகே சென்ற போது, அவ்வழியே பின்னால் வந்த, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், அண்ணாதுரை மீது மோதிய வாகனத்தை கண்டு பிடிக்காமல், போலீசார் மெத்தனமாக இருப்பதாகவும், உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு, நேற்று மதியம் அண்ணாதுரையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர்.