தர்மபுரி அரசு கல்லுாரியில் ஜூன் 2 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்
தர்மபுரி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில், 2025-26ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு ஜூன், 2 துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது. 2ம் தேதி சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறன் மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகள் மற்றும் விதவை, விளையாட்டு சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கும், 3ம் தேதி விடுபட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.வரும், 4ல் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வணிகவியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு பாட பிரிவு மாணவர்களுக்கும், 6ல் தமிழ், ஆங்கிலம், காட்சிவழி தொடர்பியல், ஆடை வடிமைப்பியல், சமூகப்பணி, உளவியல் பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடக்கும். மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழி அழைப்பு பெற்ற மாணவ, மாணவியர் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.சேர்க்கைக்கு வரும் சிறப்பு பிரிவு மாணவர்கள், விண்ணப்ப படிவம், டிசி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி, வருவாய் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 4 பாஸ்போர்ட் புகைப்படங்களுடன், பெற்றோரை அழைத்து வர வேண்டும். கலை மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு, 3,090 ரூபாய், அறிவியல், 3,110, பி.காம்., (சி.ஏ.,) பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., பாடப் பிரிவுகளுக்கு, 2,210 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்கள், காலியிட விபரங்களை, www.gacdpi.ac.inஎன்ற இணையதளம் மூலம் அறியலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.