கலெக்டர் அலுவலக ஆவணங்கள் புதிய கட்டடத்திற்கு இடமாற்றம்
தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் கட்டி, 58 ஆண்டுகள் ஆன நிலையில், இட பற்றாக்குறையை போக்கும் வகையில், ஒரே கட்டடத்தில் அனைத்து துறைகளும் இயங்க, கூடுதல் கட்டடம் தேவைப்பட்டது. இதனால், பழைய ஆர்.டி.ஓ., ஆபீஸ் மைதானத்தில், 4.25 ஏக்கரில், 36.62 கோடி ரூபாயில், 5 தளங்களுடன் கூடிய, புதிய கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், கடந்த, 7 அன்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, பழைய கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஆவணங்கள் புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யும் பணி நடக்கிறது. புதிய கட்டடத்தில் கலெக்டர் அலுவலம், டி.ஆர்.ஓ., அலுவலகம், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கருவூலம் உட்பட, 34 துறை அலுவலகங்கள் வரும், திங்கட்கிழமை முதல் செயல்பட உள்ளதால், அதற்கான பணிகளில், துறை சார்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.