மழைக்கு ஒழுகும் அறையால் சி.டி., ஸ்கேன் கருவி பழுது
அரூர்: அரூர் அரசு மருத்துவமனையில், மழைக்கு ஒழுகும் அறையால், சி.டி., ஸ்கேன் கருவி பழுதாகி, ஸ்கேன் மையத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் மையம் உள்ளது. கட்டணமாக, 500 ரூபாய் மட்டுமே வசூலிப்பதால், ஏழை நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் பயன் பெறுகின்றனர். சில நாட்களாக பெய்த மழை யால், அரசு மருத்துவமனை கட்டடத்தில் மழைநீர் கசிந்தது. குறிப்பாக, ஸ்கேன் கருவி உள்ள கட்டடத்தில் கூரை ஒழுகியதால், கருவி பழுதாகி விட்டது. கருவி உள்ள அறை அக்., 22ம் தேதி முதல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை செய்ய முடியாமல், தர்மபுரி அல்லது சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, நோயாளிகளை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி கூறுகையில், ''மழை பெய்ததால் சி.டி., ஸ்கேன் மைய கட்டடத்திற்குள், சொட்டு சொட்டாக தண்ணீர் கசிகிறது. இதனால் ஸ்கேன் செய்ய முடியாத நிலை உள்ளது. மழை பெய்யும் போது மட்டுமே இப்படி நடக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.