| ADDED : ஜூன் 24, 2024 07:15 AM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பென்னாகரத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சங்க மாவட்ட தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முனுசாமி, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் மணி, இ.கம்யூ., தர்மபுரி மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் கட்டட தொழிலாளர் சங்கத்தின், மாநில அமைப்பு நிலை மாநாட்டிற்கு, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது. தர்மபுரி மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் அளிக்கப்படும் கேட்பு மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதிவு செய்துள்ள அனைவருக்கும் திருமண உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு கல்வி, மகப்பேறு, இயற்கை மரணத்திற்கு வழங்கும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு மாதம், 2,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்தி, வீடு இல்லா கட்டட தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.இதில், மாவட்ட துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.