பென்னாகரம்: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலமாக, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தின்படி, கற்போருக்கான எழுத்தறிவு தேர்வு நடந்தது.சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்த தேர்வில், 20க்கும் மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள், கடந்த சில மாதங்களாக இங்கு பயின்று வந்தனர். தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கற்று கொடுத்து வந்தார். தற்போது அவர்களுக்கு வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் உள்ளிட்டவை சோதிப்பதற்கான அடிப்படை தேர்வு நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் முனுசாமி உள்ளிட்டோர் தேர்வு மையத்தை பார்வையிட்டனர்.* அரூர் கல்வி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் தாளநத்தம் வெங்கடதாரஅள்ளி புதுார், புட்டிரெட்டிப்பட்டி, சுங்கரஅள்ளி, ரேகடஹள்ளி, குருபரஹள்ளி, தா.அய்யம்பட்டி உள்ளிட்ட, 30 மையங்களில், எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு, 6 மாத கால தன்னார்வலர் மூலம், பயிற்சி அளிக்கப்பட்டு, கற்போருக்கான எழுத்தறிவு தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை, 540 பேர் எழுதினர். இதை கடத்துார் வட்டார கல்வி அலுவலர் முருகன், ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியை குணவதி, மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.