கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த கோரி விவசாயிகள் மனு
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மொத்தம், 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்துார், சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையேற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய, 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்துக்கு கடந்த, 2020 பட்ஜெட்டில், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், கடந்த, மூன்று மாதங்களுக்கு மேலாக, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது.நேற்று முன்தினம், தர்மபுரி குரும்பட்டியில், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' நிகழ்ச்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற, பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரனிடம் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மொரப்பூர் நிலத்தடி நீர்மேம்பாட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயபால், நிர்வாகி சுரேஷ் மற்றும் விவசாயிகள் பேசியதுடன், அது குறித்து விபரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபையில் பேசுவதாக நாகேந்திரன் கூறியதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.அதேபோல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மங்களூரு - சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை, 3:40 மணிக்கு மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மொரப்பூர் ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் ரகுநாதன், பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரனிடம் மனு அளித்தார். அதற்கு அவர், 'இன்னும் ஒரு மாதத்திற்குள் மொரப்பூரில், மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.