தென்னை விவசாயிகளை பாதுகாக்க இலவச உரம்
தர்மபுரி,:தென்னை விவசாயிகளை பாதுகாக்க ஆண்டுக்கு இருமுறை உரத்தை, அரசு இலவசமாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பொன்னுசாமி, தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருச்சுனன், மாவட்ட தலைவர் குமார் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.இதில், வெள்ளை ஈக்களால் காய்ந்து போன தென்னை மரம் ஒன்றுக்கு, 10,000 ரூபாய்- இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டுநீர் பாசனங்களுக்கு அரசு முழு மானியம் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளை பாதுகாக்க ஆண்டுக்கு இருமுறை மாநில அரசு இலவசமாக உரங்களை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.