உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி மாவட்டத்தில் சாரல் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் சாரல் மழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தர்மபுரி, தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல், பரவலாக மிதமான சாரல் மழை பெய்தது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, 23 மி.மீ., அரூர், 13, ஒகேனக்கல், 7.60, பாப்பிரெட்டிப்பட்டி, 4, என மொத்தம், 47.60 மி.மீ., மழை பதிவானது. மேலும், நேற்று காலை முதல், தர்மபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. தர்மபுரி டவுன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.* அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம், சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, 2வது நாளாக, நேற்றும் அதிகாலை முதல் சாரல்மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. அரூரில் நான்குரோடு, திரு.வி.க., நகர், மஜீத்தெரு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். சாரல் மழையுடன் குளிர் காற்று வீசுவதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.மேலும், மழை தொடர்ந்து பெய்வதால், விவசாய நிலத்தில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நிலையிலுள்ள மரவள்ளி கிழங்கு, நெல் உள்ளிட்டவைகளை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. தாழ்வான பகுதியிலுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல், விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை