ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., குற்றச்சாட்டால் பணியிட மாற்றம்
கிருஷ்ணகிரி, ஓசூர் மாநகராட்சியில் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, சிறப்பு ஆர்.ஐ., பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ.,யாக இருந்தவர் சுரேஷ்குமார். இவர், கடந்த, 30 ஆண்டுகளாக ஓசூர் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி உள்ளார். இவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையிலும், இடமாற்றம் செய்யப்படவில்லை. சொத்துவரி போடுவதில், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மதிப்பு குறைத்து போட்டு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நம், 'காலைக்கதிர்' நாளிதழிலும் செய்தி வெளியானது. மேலும், தி.மு.க., பிரமுகரும், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரனும், இது குறித்து, 'உள்ளாட்சிகள் அமைப்பு முறை மன்ற நடுவம்' சென்னையில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆஜரான, ஓசூர் உதவி கமிஷனர் நாராயணன் மற்றும் அலுவலர்கள், சுரேஷ்குமாரால், ஓசூர் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., சுரேஷ்குமாரை, கிருஷ்ணகிரி நகராட்சி சிறப்பு ஆர்.ஐ.,யாக பணியிட மாற்றம் செய்து, நகராட்சிகள் நிர்வாக இணை இயக்குனர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.