| ADDED : ஜூன் 22, 2024 12:33 AM
தர்மபுரி : தர்மபுரி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எலி மருந்து உட்கொண்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டது.இது குறித்து, மருத்துவ கல்லுாரி டீன் அமுதவல்லி கூறியதாவது:தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதன் முறையாக குருதி நீர்மம் மாற்றுசிகிச்சை (பிளக்ஸ்) எனப்படும் உயர்தர ரத்த மாற்று சிகிச்சை முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் தர்மபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்ட மக்களும் பயனடைவர். யாரேனும் எலி மருந்து மற்றும் பூச்சி மருந்து உட்கொண்டால், அவர்களது கல்லீரல் மட்டுமின்றி சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளது. ரத்த மாற்று சிகிச்சை, 4 முதல், 5 முறை அளிப்பதன் மூலம், அவர்களை காப்பாற்ற முடியும். இந்த பிளக்ஸ் இயந்திரம், 15 லட்சம் ரூபாய்.தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம், சாமான்ய மக்களும் பயனடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை, எலி மருந்து உள்ளிட்ட மருந்து உட்கொண்ட நோயாளிகள் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டி இருந்தது. இந்த உயர்தர சிகிச்சையை இங்கேயே தொடரலாம். இவ்வாறு கூறினார்.கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன், பொது மருத்துவத்துறை தலைவர் வசந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.