உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்

ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் யூனியன் ஓபிளிநாய்க் கனஹள்ளி பஞ்.,ல், கணபதி நகர், காவேரிகவுண்டன் கொட்டாய், முத்தானுார் கெடகாரஅள்ளி, கோம்பை, மதனாபுரி உள்ளிட்ட, 12 கிராமங்கள் உள்ளன. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோம்பை பகுதியில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும், அங்குள்ள கல்லாற்றை கடந்து, கடத்துார் வந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. மலையிலிருந்து வரும் மழைநீர் கல்லாற்றில் செல்லும்போது, ஆற்றின் ஒருபுறமுள்ள, 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், ஆற்றை கடக்க முடியாமல், தங்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை உள்ளது.ஆற்றை கடக்க பாலம் அமைக்க, அப்பகுதி மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை அடுத்து, என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தில், 39.35 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி கடந்த, ஓராண்டுக்கு முன்பு தொடங்கியது. கோடை காலத்திற்கு முன் கட்டப்பட்டால், மக்கள் கல்லாறு வழியாக செல்ல வசதியாக இருக்கும். ஆனால், பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது, மழை பெய்து ஆற்றில் தண்ணீர் செல்வதால், மக்கள் ஆற்றை தாண்டி வரமுடியாமல் தவிக்கின்றனர். பால பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து, கடத்துார் ஒன்றிய பொறியாளர் ஸ்ரீதர் கூறியதாவது: இப்பாலம் கட்டும் பணி தொடங்கி, ஓராண்டு ஆகிவிட்டது. சில காரணங்களால் பணி தாமதமானது. தொடர்ந்து பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ