கிராம சபையில் கேள்வி கேட்டதால் போலீசில் புகார் சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் மனு
தர்மபுரி, தர்மபுரி அருகே, கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதால், சமூக ஆர்வலர்கள் மீது போலீசில் புகார் அளித்த அதிகாரிகள் மீது, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி, பத்து ரூபாய் இயக்க மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவதுதர்மபுரி ஒன்றியம், உங்கராணஹள்ளி பஞ்.,ல் கடந்த, 11 அன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பத்து ரூபாய் இயக்க நிர்வாகிகள் கோவிந்தசாமி மற்றும் பெரியண்ணன் கலந்து கொண்டனர். அப்போது, பஞ்., வளர்ச்சி சம்பந்தமான பதிவேடுகள், ஆவணங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்து தரக்கோரி, பஞ்., செயலர் மற்றும் கிராம சபை பற்றாளரிடம் முறையிட்டனர். அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கத்துடன், பஞ்., செயலர் ஜெகன் மற்றும் ஓவர்சியர் தாமரைச்செல்வி ஆகியோர் மதிகோன்பாளையம் போலீசில் பொய் புகார் அளித்துள்ளனர். கிராம சபையில் கேள்வி கேட்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, கேள்விகள் கேட்கும் மக்களை ஒடுக்கும் விதமாக, பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொய் புகார் அளித்த பஞ்., செயலர் மற்றும் ஓவர்சியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தனர்.மனு அளிக்க நாகராஜ் உட்பட சிலர் சென்றபோது, கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் இருந்ததால், துறை சார்ந்த அலுவலர்களுக்கு மனு அனுப்பப்பட்டது. இது குறித்து, தர்மபுரி பி.டி.ஓ., பொன்னரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டபோது, கிராம சபை தொடர்பான மனுவை விசாரிக்கும் ஏ.டி., இன்று விடுமுறையில் உள்ளார். எனவே, அவரிடம் நாளை கேட்டு சொல்கிறோம் என, அனைவரும் நழுவி கொண்டனர்.