தர்மபுரி: தர்மபுரி அருகே பாரதி புரத்தில், சிறு பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி நகராட்சி, 30வது வார்டு பாரதிபுரம், ராஜீவ்காந்தி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ராஜீவ்காந்தி நகர் சாலை, 20 அடி அகலம் இருந்த நிலையில் ஆக்கிரமிப்புகளால், 12 அடிக்கு குறுகிவிட்டது. இந்நிலையில், நகராட்சி சார்பில் சாலையின் தொடக்க பகுதியில் சாக்கடை கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள, சாலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் நிலையில், 4 சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். தற்போது, அந்த ரோட்டில் சிறு பாலம் மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணியால் சாலை மேலும் குறுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரப்புகளை அகற்றி விட்டு, சிறு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என கூறி, பொதுமக்கள் நேற்று பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.கவுன்சிலர் மாதேஷ், நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று, பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.