உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டதாரியை அடித்து கொன்ற உறவினர் கைது வாணியாற்றில் சடலத்தை தேடும் போலீசார்

பட்டதாரியை அடித்து கொன்ற உறவினர் கைது வாணியாற்றில் சடலத்தை தேடும் போலீசார்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே, நிலத்தகராறில் பட்டதாரியை அடித்து கொன்று ஆற்றில் புதைத்த உறவினரை போலீசார் கைது செய்து, சடலத்தை தேடி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், 35. எம்.எஸ்சி., பி.எட்., பட்டதாரி. பாப்பிரெட்டிப்பட்டி தனியார் கிழங்கு மில்லில் பணிபுரிந்த அவர், மாயமானதாக, அவரது தாய் கந்தாயி, கடந்த பிப்., 3ல் அளித்த புகார் படி, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். சிலம்பரசன் மாயம் குறித்து, தன் தங்கை கற்பகம் மகன் சங்கர், 35, நன்றாக அறிவார் என கந்தாயி கூறியிருந்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த ‍அவரை, நேற்று காலை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் சிலம்பரசனை, சங்கர் கொலை செய்தது தெரிந்து, அவரை கைது செய்தனர்.சிலம்பரசன், சங்கருக்கு நிலத்தகராறு இருந்தது. கடந்த, 2024 மே மாதம் இருவரும், சிலம்பரசன் வீட்டின் அருகே வாணியாறு பகுதியில் இரவில் மது குடித்துள்ளனர். அப்போது சுத்தியல் கொண்டு தலையில் அடித்து சிலம்பரசனை கொலை செய்து, வாணியாற்றில் புதைத்து விட்டதாக, போலீசாரிடம் சங்கர் கூறியுள்ளார். சிலம்பரசன் புதைத்ததாக கூறிய இடத்திற்கு சங்கரை, போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அரூர் டி.எஸ்.பி., காரிகால் பாரி சங்கர் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சின்னா, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் சபரிநாதன், அசோக்ராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் முன்னிலையில், வாணியாறு ஆற்று பகுதியில் பொக்லைன் மூலம் நேற்று மாலை 3:30 முதல், 5:45 மணி வரை தோண்டியும், சிலம்பரசனின் உடல் கிடைக்கவில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் தோண்டுவது நிறுத்தப்பட்டது. சிலம்பரசன் கொலை செய்து ஆற்றில் தான் புதைக்கப்பட்டாரா அல்லது வேறு எங்காவது கொலை செய்து வீசப்பட்டாரா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ