| ADDED : ஜூன் 26, 2024 06:52 AM
திண்டுக்கல் : பணி செய்ய விடாமல் தடுப்பது,அநாகரீகமாக பேசுவது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பரிதாவாணி மீது பொது சுகாதார பிரிவில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,அலுவலர்கள் மேயரிடம் புகார் கொடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதாரபிரிவில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள்,ஆய்வாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதியிடம் கொடுத்த மனுவில், மாநகர் நல அலுவலர் பரிதாவாணி எங்கள் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக செயல்படுகிறார். ஏரியா வாரியாக பணம் வசூலிக்க கூறுகிறார். அதை கேட்காமல் இருப்பவர்களை அவமரியாதையாக பேசுகிறார். பிறப்பு,இறப்பு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார். அலுவலகத்தில் சம்பந்தமில்லாத நபரை வைத்து கொண்டு மிரட்டும் தொணியில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.மாநகர நல அலுவலர் பரிதாவாணி கூறுகையில்'' சுகாதார அலுவலர்கள்,ஆய்வாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய். நான் முறையாக தான் பணியில் ஈடுபட்டு வருகிறேன். என் பெயரை சொல்லி ஒரு சில சுகாதார அலுவலர்கள் பொது மக்களிடம் பணம் வாங்கி உள்ளனர். இது எனக்கு தெரிந்தது. கமிஷனரிடமும் புகார் கொடுத்துள்ளேன் ''என்றார்.