உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ---கிடப்பில் ரோடு விரிவாக்க பணி அமைச்சர் தொகுதியில் அலட்சியத்தால் அவதி

---கிடப்பில் ரோடு விரிவாக்க பணி அமைச்சர் தொகுதியில் அலட்சியத்தால் அவதி

கன்னிவாடி: கோனூர்-குஞ்சனம்பட்டி ரோடு விரிவாக்க பணிக்காக 4 வாரங்களாக கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரோடு பணி துவங்காமல் கிடப்பில் விட்டுள்ளதால் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள இத்தடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் கிராம சாலை திட்டத்தில் சீரமைப்பு நடந்தது. பின்னர் பராமரிப்பின்றி விடப்பட்டதால் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. போதிய அகலமின்றி வாகன போக்குவரத்தில் சிரமத்தை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையால் சில வாரங்களுக்கு முன் விரிவாக்கத்துடன் சீரமைப்பிற்கான ஏற்பாடு நடந்தது. இதில் சிமென்ட் குழாய் பாலத்தை அகற்றி புதிய கான்கிரீட் பாலம் கட்டும் பணி துவங்கியது. போக்குவரத்திற்காக வெறுமனே மண் கொட்டி நிரவிய வலுவற்ற குறுகலான துணைப்பாதை அமைத்தனர். அடுத்த சில நாட்களில் மழைநீர் வயலில் தேங்குவதாகக்கூறி துணைப்பாதை அகற்றினர். வாகன போக்குவரத்து தடைபட்டதால் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். ஒரு பாலம் மட்டுமே பணி முடிந்து 3 வாரங்களான நிலையில் இணைவு பகுதியில் ஜல்லி கற்களுடன் தார் ஊற்றி சீரமைக்கவில்லை. ரோடு சீரமைப்பு பணியும் துவங்கவில்லை. அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள் தாங்களாகவே புதிய பாலத்தின் இணைவு பகுதியில் மண் நிரப்பி கடந்து செல்ல துவங்கினர். கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி பகுதிகளுக்கான பஸ் சேவை பாதிப்பால் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. மாலையில் வீடு திரும்புவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். போக்குவரத்து தடைபடாத நிலையில் துணைப்பாதை அமைத்து சீரமைப்பு பணியை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிடப்பில் விட்டதால் பாதிப்பு

மருதை, கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி : மாணவர்கள் தினமும் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று திரும்ப இத்தடத்தில் இயங்கிய அரசு பஸ் வசதியை பயன்படுத்தினர். கூலித்தொழிலாளர்கள் விவசாயிகளும் இத்தடத்தில் பஸ் சேவையை நம்பினர். 3 வாரங்களுக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தியபோதும்பாலம் சீரமைப்பு மட்டுமே நடக்கிறது. மழை நேரங்களில் மாணவர்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ரோடு சீரமைப்பை முழுமையாக கிடப்பில் விட்டுள்ளனர்.

சிரமத்தில் மக்கள்

மணிவண்ணன் ,தனியார் நிறுவன ஊழியர், வெல்லம்பட்டி : கருப்பணசுவாமி கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்தாமல் அதன் மீதே சிமென்ட் தளம் அமைத்துள்ளதால் எந்த பயனும் இருக்காது. பிற இடங்களில் போக்குவரத்து பாதிக்காமல், வலுவான துணைப்பாதை அமைத்து பணி நடப்பது வழக்கம். ஆனால் அலட்சியகதியில் நடக்கும் இப்பணிக்காக வலுவான துணைப்பாதை அமைக்காமல் மக்களை சிரமத்தில் தள்ளி உள்ளனர்.

தடுமாறும் வாகனங்கள்

குமார் வியாபாரி, கன்னிவாடி : சீரமைப்பிற்கான எவ்வித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. போக்குவரத்து பாதிக்காத வகையில் வழித்தட மாற்றத்திற்கான ஏற்பாடு போதிய அளவில் இல்லை. சேரும் சகதியுமான நிலையில், வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு, மழை நேரங்களில் குழிகள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகளை தடுமாற செய்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை