| ADDED : ஏப் 14, 2024 06:44 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று 3 மணி நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதியடைந்தனர்.கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். பயணிகள் எண்ணத்திற்கு ஏற்றார் போல் மழை வெளுத்து வாங்க மலை நகர் சில்லிட்டு இதமான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. நேற்று காலை முதலே வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சமாளிக்க போதுமான போலீசார் இல்லை. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, உகார்தே நகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, ஏரி சாலை என நகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. நெரிசலால் வாகனங்கள் பல பழுதாகி நிற்க மேலும் நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நகரை வந்தடைய அரை மணி நேரம் என்ற நிலையில் நேற்று 3 மணி நேரமானது. கொடைக்கானலில் காலம் காலமாக தொடரும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அதிகாரிகளிடம் மாற்று திட்டங்கள் ஏதும் இல்லை. மாறாக சீசன் தருணங்களில் பெயரளவிற்கு கூட்டங்கள் நடத்தப்படுவதும், அவை செயல்பாட்டிற்கு வராமல் வெறும் கண் துடைப்பாக முடிவதும் தொடர்கிறது.கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வரும் நிலையில் இங்கு போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு வசதிகள் அறவே இல்லை. வெறுமனே நெடுஞ்சாலைத்துறை ரோடுகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து அவற்றின் மூலம் வளம் காண்கிறார்களே தவிர வளர்ச்சி என்பது துளிகூட இல்லை. கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஊட்டி போன்று மாற்று வழித்தடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் ஆண்டுதோறும் கோட்டை விடும் மாவட்ட நிர்வாகம் இனியாவது இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.சுப்ரமணி, டிரைவர், உத்தமபாளையம் : கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்தேன். போக்குவரத்து நெரிசலால் படாதபாடு பட்டேன். இங்கு ரோடு கட்டமைப்பு வசதி இல்லை. ஏராளமான சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலை பார்த்து திரும்பி செல்லும் அவலம் நேர்ந்தது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் திட்டங்களை இனிவரும் காலங்களிலாவது அரசு கையில் எடுக்க வேண்டும். நெரிசலால் பயணிகள் இயற்கை உபாதை, உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டது. பெண்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.வெங்கடேஷ், டிரைவர், வேலுார் : கொடைக்கானலுக்கு மாற்று வழி ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் செல்ல மூன்று மணி நேரத்திற்கு மேலாக அவதிப்பட்டேன். இதனால் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாயினர். கொடைக்கானலில் பார்க்கிங் வசதி அறவே இல்லை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசாரும் இல்லை. நகரில் குடிநீர் வசதியில்லை. சில வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கும் போக்கால் விபத்துக்கள் ஏற்படுகிறது. கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த இனியாவது அதிகாரிகள் ரோடு வசதியை அதிகரிக்க வேண்டும். இதோடு மாற்று வழி பாதையை ஊக்குவித்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.