| ADDED : ஜூலை 06, 2024 06:09 AM
கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் லைசென்ஸ் இல்லாத டிரைவரால் ஓட்டிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 7 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.கோபால்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டியை சேர்ந்த கண்ணன் சேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் விஷ்வா 22, ஓட்டுனர் உரிமம் இல்லாது கே.அய்யாபட்டியில் இருந்து கோபால்பட்டிக்கு 7 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.வேம்பார்பட்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணித்த 7 பெண் தொழிலாளர்கள், விஷ்வா காயமடைந்தனர். திண்டுக்கல் தனியார், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாணாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கோபால்பட்டி பகுதியில் 80க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் பெரும்பாலான ஆட்டோக்கள் எப்.சி., தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், காப்பீடு இல்லாமலும், ஓட்டுநர்களுக்கு உரிய உரிமம் இல்லாமலும் ஆட்டோக்களை ஓட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் ஆட்டோக்கள் பல்வேறு விபத்துகளில் சிக்குவது தொடர்கிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும்.