உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களால் தினம் தினம் தொல்லை

தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களால் தினம் தினம் தொல்லை

திண்டுக்கல், : திண்டுக்கல் சுற்றுப்பகுதி ரோட்டோரங்களில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் தினமும் வாகன ஓட்டிகள்,மக்கள் அவதிப்படுகின்றனர். பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் நகர்,புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மின் ஒயர்கள் ரோட்டோரங்களில் தாழ்வாக தொங்குகின்றன. இவைகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் எந்நேரமும் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. சில பகுதிகளில் தொடும் துாரத்திலும் ஆபத்தான மின் ஒயர்கள் தொங்குகின்றன. தொடரும் இப்பிரச்னைகளால் பலரும் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. இதுஒருபுறம் இருக்க கேபிள் ஒயர்களும் தாழ்வாக தொங்குகின்றன. இதனாலும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இப்பிரச்னைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மட்டுமன்றி, கேபிள் டிவி தொடர்பான கண்காணிப்பு அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

எங்கு பார்த்தாலும் இதே தான்

செல்வம், வழக்கறிஞர், திண்டுக்கல்: நகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மின் ஒயர்கள் தாழ்வாக தான் தொங்குகிறது. இதனால் சாதாரண வாகனங்கள் கூட தெருக்களில் நுழைய முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் அருகில் செல்லும் மின் ஒயர்களை சிலர் விழிப்புணர்வு இல்லாமல் தொட்டு விட்டால் உயிர் பறிபோகும் நிலையும் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மீது ஏன் செவிசாய்க்க மறுக்கிறார்கள். அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை தேவை

சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, திண்டுக்கல்: மின்வாரிய அதிகாரிகள் மழை,வெயில் பாராமல் பணியாற்றுகின்றனர். முதலில் அவர்களை பாராட்டுகிறேன். மின் ஒயர்கள் தாழ்வாக இருப்பதால் பள்ளி வாகனங்களிலிருந்து எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சில நேரங்களில் தாழ்வான மின் ஒயர்களில் உரசி வாகனங்கள் தீப்பிடித்து எரிகின்றன. பல பிரச்னைகள் இதனால் ஏற்படுகிறது. அதிகாரிகள் மழைக்காலம் தொடங்கும் முன் இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை