திண்டுக்கல்லில் சேதமான மின் கம்பங்கள்: அச்சத்தில் மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் ரோட்டோரங்களில் நிற்கும் மின்கம்பங்கள் சேதமான நிலையில் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழநி, வடமதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வாரியம் பராமரிப்பில் ரோட்டோரங்கள், தெருக்களில் மின்கம்பங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமாகவும், சரிந்த நிலை, ஒயர்களும் தாழ்வான நிலையில் உள்ளன. இதனால் அவ்வழியில் செல்லும் மக்கள் எந்நேரமும் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சேதமான நிலையிலிருக்கும் மின்கம்பங்கள் அதன் கொண்டை பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளதால் அருகிலிருக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடனே இருக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட மின்வாரிய அலுவலர்களிடம் பொது மக்கள் புகார் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மழை நேரங்களில் சேதமான மின்கம்பங்கள் இருக்கும் தெருக்களை தவிர்த்து வேறு வழியாக மாறி செல்லும் நிலைக்கு மக்கள், பாதசாரிகள் வந்து விட்டனர். மாவட்டம் முழுவதும் சேதமான நிலையிலிருக்கும் மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை உடனே மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து சேதமான நிலையிலிருக்கும் மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிதாக மின்கம்பங்கள் தேவைப்படுகிறது என உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் சேதமான அனைத்து மின்கம்பங்களும் மாற்றப்படும் என்றார்.