உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பில் வாய்க்கால்கள்; அவதியில் விவசாயிகள்

ஆக்கிரமிப்பில் வாய்க்கால்கள்; அவதியில் விவசாயிகள்

பழநி: தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் பாப்பான்குளம் பாசன விவசாயிகள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.பழநியின் முக்கிய பகுதியில் உள்ளது பழநி பாப்பான் குளம். இக்குளத்தின் மூலம் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்குளத்திற்கு வரும் கிளைக்கால்வாய்கள் சேதமடைந்து ஆக்கிரமிப்பில் உள்ளதால் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. இக்கால்வாயில் சிறு நாயக்கன் குளம் நிரம்பி வரும் தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து இக்குளத்துநீரை மாசு படுத்துகிறது. குடிமராமத்துப் பணியின்போது குளத்தின் கரைகளும் சீரமைக்கப்படவில்லை.

சேதமான குளம் பாதை

முத்துராமன், பாசன விவசாயி, பாப்பான்குளம்: குளத்தின் பாசன வரத்து ,போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் தண்ணீர் பாசன போக்குவரத்தில் சிரமம் உள்ளது. குளத்தின் அருகே உள்ள பாதை சேதமடைந்து இதில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளத்தின் கரையில் செடி, கொடிகள் வளர்ந்து நடமாட முடியாமல் உள்ளது. பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் முறையாக செய்ய வேண்டும்.

குறுகிப்போன கால்வாய்

மருதபாணி ,பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர்: குளத்திலிருந்து பாசன நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. குறிப்பாக நீர் மட்ட கால்வாய் மிகவும் குறுகி உள்ளது இதனை சரி செய்ய வேண்டும். இது குறித்து அளவீடு செய்து முறைப்படுத்த பலமுறை முறையிட்டும் அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் வாய்க்கால்கள் வழியாகவே விளை் பொருட்கள், உரங்கள் எடுத்துச் செல்ல முடியும். ஆனால் தற்போது ஆக்கிரமிப்பால் வாய்க்கால்கள் குறுகி உள்ளதால் பாசன விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எந்தவித நடவடிக்கையும் இல்லை

விஷ்ணு வர்தன், பாசன விவசாயிகள் சங்க தலைவர்: பாப்பான் குளம் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், தாலுகா போலீசார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மனு அளித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீன்வளத்துறையினர் பாசன விவசாயிகள் பாதிக்காத வகையில் மீன் பிடி தொழிலை செய்ய பாசன விவசாயிகள் சங்கத்திடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். குளத்தின் கரைகளை மேம்படுத்த பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ