உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு ஊழியர்கள் முதுகில் குத்திய தி.மு.க., ; முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாடல்

அரசு ஊழியர்கள் முதுகில் குத்திய தி.மு.க., ; முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாடல்

பழநி : பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களின் முதுகில் தி.மு.க., குத்திவிட்டது '' என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.பழநியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., அளித்த 525 வாக்குறுதிகளை மறந்து விட்டது. இந்த அரசின் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என பொய் கூறுகிறார்கள். அரசு ஊழியர்கள் கடந்த தேர்தலில் தி.மு.க., தொண்டர்களை போல் செயல்பட்டார்கள். கள்ள ஓட்டு போடவும் உதவினார்கள். பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நம்பி அவ்வாறு செயல்பட்டனர். தற்போது அரசு ஊழியர்கள் முதுகில் தி.மு.க., குத்தி விட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்யவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழகத்தின் கடன் அளவை அதிகரித்துள்ளனர். தி.மு.க., அரசு இனி நீடித்தால் தமிழகத்தை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது என்றார்.கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மூன்று வயது குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் பாலியல் தொல்லையில் அவதிப்படுகின்றனர்.இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் பெண்கள் சிரமம் அடைகின்றனர். பழநியை திருப்பதி கோயில் போல் மாற்றுவதாக வாக்குறுதி அளித்தனர் ஆனால் நிறைவேற்றவில்லை என்றார்.நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என் கண்ணன், முன்னாள் எம்.பி., குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை