| ADDED : ஜூலை 23, 2024 08:53 PM
திண்டுக்கல்:பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிக்க கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் அளித்துள்ள விபரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய, கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கொடுத்த அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கேட்டு, உதவித்தொகை விண்ணப்பங்களை பூர்த்தி செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கும்பல் ஒன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 2022 - 23ல் 10ம் வகுப்பு படித்த மாணவர்களின் பெயர் பட்டியல்களில் உள்ள அலைபேசி எண், முகவரி விபரங்களை பெற்று, அதிகாரிகள் போல் போலியாக, அலைபேசி வீடியோ காலில் பேசியுள்ளனர்.அதோடு, எதிர்தரப்பில் பேசுபவரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விபரங்களை பெற்று, அவர்களுக்கு வங்கியில் இருந்து வந்த ஓ.டி.பி., எண்ணை பெற்று பணத்தை 'அபேஸ்' செய்கின்றனர். அந்த வகையில் ஜூலை 9ல் இருந்து ஜூலை 23 வரை 15 நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேரிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.