| ADDED : ஜூலை 02, 2024 05:38 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த இளம் பெண்கள் காதலர்களுடன் தனிமையில் ஓடைப்பட்டி, ரங்கநாதபுரம், கரட்டு மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இவர்களை கண்காணிக்கும் கும்பல் காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி நகைகளை பறித்து செல்கின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்கள் தாலுகா, தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். நேற்று திண்டுக்கல் பழநி ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை போது இரு டூவீலரில் நான்கு வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறித்த கும்பல் என்பதும் இவர்கள் திண்டுக்கல் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் 31, ரங்கநாதபுரம் செந்துார் பாண்டி29, மாலப்பட்டி சிவசக்தி 31, ரவுண்ட் ரோடு ஷேக் பரீத் 21, என்பது தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார் 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.