வேடசந்தூர், : குடகனாறு அணையின் கீழ் பகுதியில் இருந்து செல்லும் குடகனாற்றின் வழிநெடுகிலும் கருவேலம் மூடிக்கிடப்பதால் அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த ஆற்றினை ஆறாக ஓட வைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.ஆனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் 50 அடி துாரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்பதால் கருவேலம் முட்கள் முளைக்கவில்லை. அதை கடந்து ஆற்றுப்பகுதியில் யாரும் செல்ல முடியாது.ஆற்றுப்பகுதி ஓரங்களின் சுற்றுப்பகுதி மக்கள் கால்நடைகளை கூட மேய்க்க வழி இல்லை. யாரும் ஆற்றில் ஒரு பகுதியில் இருந்து மறு கரைக்கு கடந்து செல்ல முடியாது. அந்தளவு கருவேல முட்கள் சூழ்ந்துள்ளன. குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்லும் ஆற்றுப்பகுதியில் தற்போதும் ஏராளமான மீன்கள் உண்டு. முட்கள் நிறைந்து கிடப்பதால் யாரும் அதற்குள் சென்று பிடிக்க முயல்வதில்லை. இப்பகுதி மக்களின் நலன் கருதி வழி நெடுகிலும் மாவட்ட எல்லை வரை உள்ள கருவேல முட்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். விளையாட கூட வாய்ப்பில்லை
பி.முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், அழகாபுரி: ஒரு காலத்தில் மணல் பாங்காக இருந்த ஆறு தற்போது கருவேல முட்கள் நிறைந்த காடாக மாறிவிட்டது. இதனால் இப்பகுதி இளைஞர்கள் ஆற்றுப்பகுதியில் சென்று விளையாடுவதற்கு கூட வாய்ப்பில்லை. அழகாபுரியை யொட்டி குடகனாறு செல்லும் நிலையில் கருவேல முட்கள் நிறைந்து கிடப்பதால் விஷ பூச்சிகள்வந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்கிகுடகனாற்றுப் பகுதியில் உள்ள கருவேல முட்களை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும். முற்றிலுமாக மாறிவிட்டது
எம்.முருகன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர், அழகாபுரி: ஒரு காலத்தில் இப்பகுதி மக்கள் துணி துவைப்பது, குளிப்பது என்பதெல்லாம் ஆற்றுப்பகுதியில் தான். முன்பு ஆற்றிலே ஊத்து போட்டு தண்ணீர் பிடித்தோம் . விடுமுறை தினங்களில் ஆற்றில் மீன் பிடிப்பது தான் எங்களது பொழுதுபோக்கு. ஆனால் நிலைமை இன்று முற்றிலுமாக மாறிவிட்டது.ஆற்றுப்பகுதியில் கண்ணுக்கு எட்டிய துாரம் கருவேல முட்களே காட்சியளிக்கிறது. அடர்ந்து வளர்ந்துள்ளதால் அந்தப் பகுதிக்கு யாரும் செல்வதில்லை. இதை பயன்படுத்தி சட்ட விரோத செயல்களும் தொடர்கிறது. பாதுகாக்க வேண்டும்
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: குடகனாறு ஒரு காலத்தில் மணல் பாங்கான ஆறாக மழைக்காலத்தில் ஆறு மாதங்களுக்காவது வற்றாமல் நீரோடும் ஆறாக இருந்தது. தொடர் மணல் திருட்டால் எங்கு பார்த்தாலும் கருவேலம் முளைத்துவிட்டன. இதுமட்டுமின்றி தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் கோரைப்புற்கள் ஆள் உயரத்திற்கு முளைத்து ஆற்றுக்குள் எந்தப் பகுதியிலும் இறங்க முடியாத அளவு,அடர்ந்த காடு போல் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உறிஞ்சப்படும் நிலையில் ஆற்றோர விவசாயமும் பாதிக்கப்படுகிறது . குடகளாறு ஆற்றுப்பகுதியை யொட்டி உள்ள மக்களின் நலன் கருதி ஒட்டு மொத்த கருவேலங்களை அகற்றி குடகனாற்றை பாதுகாக்க வேண்டும்.