| ADDED : மே 05, 2024 12:21 AM
கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் தோணிமலையில் உயரழுத்த மின்கம்பியை இழுத்த 'குட்டைக்கொம்பு 'ஒற்றை யானை மின்சாரம் தாக்கி பலியானது. இதுதான் 3 ஆண்டுகளுக்கு முன் உயிர்பலி ஏற்படுத்தியதாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன்னிவாடி அருகே தோணிமலை காப்புக்காட்டில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், உதவி வனபாதுகாவலர் வேலுமணி நிர்மலா தலைமையில் அங்கு சென்றனர். உயரழுத்த மின்கம்பியை இழுத்ததில் 25 வயதுடைய ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதே பகுதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:உயரழுத்த மின்கம்பி பகுதியை கடந்து செல்ல முயன்றபோது தாழ்வாக இருந்த கம்பியை அகற்றும் முயற்சியில் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம். கன்னிவாடி வனப்பகுதியில் சில ஆண்டுகளாக உயிர் பலி ஏற்படுத்திய குட்டைக்கொம்பு ஒற்றை யானை என இப்பகுதியினர் கூறினர். உடல் பெரிதாக இருந்த நிலையில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது என்றனர்.-
--
தோணிமலையில் இறந்த ஆண் யானை 3 ஆண்டுகளாக வனத்துறைக்கு போக்கு காட்டி உயிர் பலி ஏற்படுத்திய 'குட்டைக்கொம்பு' யானை என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். 2021 முதல் கன்னிவாடி வனப்பகுதியில் தொடர்ந்து சீசன் நேரங்களில் மலைப்பகுதி மட்டுமின்றி மலையடிவார விவசாய நிலங்கள், பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி கிராமங்களில் அடிக்கடி வலம் வந்துள்ளது. 4 விவசாயிகள், ஒரு வேட்டை தடுப்பு காவலர் என 5 பேர் இந்த யானை தாக்கியதில் இறந்துள்ளனர். ஆண்டுதோறும் இப்பகுதி விவசாயிகள் மட்டுமின்றி வனத்துறையினரும் இரவு நேர துாக்கமின்றி யானைகள் நடமாட்ட கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த 2022ல் டாப்சிலிப் முகாமில் இருந்து கலீம், சின்னத்தம்பி என கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. எனினும் தப்பியது. சில வாரங்களாக பண்ணைப்பட்டி, பன்றிமலை பகுதியில் நடமாட்டம் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தாக்கி பலியானது.