உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அகற்ற தேவை அக்கறை: குப்பையோடு குவிகிறது எலக்ட்ரானிக் கழிவு பொருட்கள்: மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு

அகற்ற தேவை அக்கறை: குப்பையோடு குவிகிறது எலக்ட்ரானிக் கழிவு பொருட்கள்: மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு

மனித நாகரிக வளர்ச்சியில் மக்காத குப்பையின் ஆதிக்கம் அதிகரித்து பூமியை பாழ்படுத்தும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித குலத்தால் தெருவிலும், குப்பை தொட்டிகளிலும் வீசப்படும் பொருட்களை முறைப்படி மறுசுழற்சிக்கும், மக்க வைக்க நடவடிக்கை எடுக்காமல் பல இடங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் அவலமும் நடக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் முழு அளவில் அக்கறையுடன் செய்யப்படும் பணியாக நடக்கவில்லை என்பதை கிராம ரோடுகளில் பயணிப்போர் எளிதாக காண முடியும். பல இடங்களிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் கழிவு பொருட்கள் கலந்த பொருட்களை துாய்மை பணியாளர்களே தீயிட்டு எரிக்கின்றனர்.இவை மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் பிற உயிரினங்களுக்கும் பேராபத்தை உருவாக்குகிறது. பிளாஸ்டிக்கில் உள்ள கார்சினோஜென், காட்மியம் எரியும்போது வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு, டையாசின், ப்யூரான் போன்ற வாயுக்களால் புற்றுநோய், காசநோய், உடல்ஊனம் என அபாயகரமான நோய்கள் ஏற்படுகிறது. காட்மீயம், துத்தநாகம், பாதரசம், குரோமியம், பேரீயம், பெரிலியம் என பொருட்கள் மிகப்பெரிய கெடுதல்களை ஏற்படுத்துபவை. உடையும் கண்ணாடி பாகங்கள் மண்ணில் புதைந்து மண் வளத்தை கெடுப்பதோடு தாவரங்கள், விலங்குகள், மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதை முறையாக அழிக்க வேண்டும் என நினைப்போருக்கும் கூட அரசு சார்பில் எந்தவொரு ஆதரவும் கிடைப்பதில்லை என்பது வேதனையான விஷயம். இத்தகைய பொருட்களை மட்டும் மக்களிடம் இருந்து சேகரிக்க மாதம் ஒருநாள் என தனித்துவமான பணியாக நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை