கன்னிவாடி : பித்தளைப்பட்டி -தருமத்துப்பட்டி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விரிவாக்க பணி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. போதிய அகலமின்றி ஆமை வேகத்தில் பணிநடப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அலட்சியத்தால் ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பல இடங்களில் தனியார் ஆக்கிரமிப்புகளால் போதிய அகலம் இன்றி வாகன போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் விரிவாக்கத்திற்கான கோரிக்கை நீடித்தது. நெடுஞ்சாலைத்துறை சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் சில மாதங்களுக்கு முன் ரோடு விரிவாக்க பணிகள் துவங்கின. போதிய அறிவிப்பு பலகை இல்லாமல் குறுகிய பகுதிகளில் விபத்துகள் தொடர்கிறது. தற்போது மைலாப்பூர் வரை விரிவாக்க பணிகள் நடக்கிறது. தரைநிலை பாலங்கள், தடுப்பு சுவர்களின்றி இருந்தபோதும் புதுப்பிக்கவோ, அகலப்படுத்தம் பணியோ நடக்கவில்லை.சில இடங்களில் ரோட்டோர பகுதியில் குழி தோண்டி கான்கிரீட் கலவை ஆங்காங்கே பாதியளவு நிரம்பி உள்ளனர். பல வாரங்களாக பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் போதிய எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைக்கவில்லை. இரவு நேரங்களில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. கனரக வாகனங்கள் எதிரே வரும் போது டூவீலர்கள் கூட கடந்து செல்ல முடியவில்லை.ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பாதுகாப்பான சூழலில் ரோடு விரிவாக்க பணி நடப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆமை வேக பணியால் அவதி
மருதை,கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி : திண்டுக்கல் கன்னிவாடி இடையிலான முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இப்பாதை அமைந்துள்ளது. இத்தடத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்த போதும் விரிவு படுத்துவதில் தாமதம் நீடித்து வந்தது. ரோட்டின் விரிவாக்க பணிகள் துவங்கி பல வாரங்களாகியும் தற்போது வரை முழுமை பெறவில்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் குறுகி இருந்த சூழலில் விரிவாக்கத்தால் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ரோடு அமைத்துள்ளனர். ரோட்டோரங்களில் சரிவர தார் ஊற்றவில்லை. இப்பகுதி விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கின்றனர். --அதிகாரிகள் அலட்சியம்
சஞ்சீவி, தனியார் நிறுவன ஊழியர், குட்டத்துப்பட்டி : மைலாப்பூர் துவங்கி ஆவரம்பட்டி, குட்டத்துப்பட்டி, குஞ்சனம்பட்டி, கோனுார்ம்பட்டி, திப்பம்பட்டி, போத்திநாயக்கன்பட்டி என 30க்கு மேற்பட்ட குக்கிராமத்தினர் இத்தடத்தை நம்பி உள்ளனர். ரோடு விரிவாக்க பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் விபத்துக்கள் தொடர்கிறது. பல இடங்களில் ரோடு போதிய அகலமின்றி குறுகலாக உள்ளன. இப்பகுதியில் சீரமைப்பதில் தாமதப்போக்கு தொடர்கிறது. இரவு நேரத்தில் பள்ளங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகளை தடுமாற செய்கின்றன. அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால் சீரமைப்பு பணியில் அலட்சிய அம்சங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனை காரணம் கூறி அரசு பஸ்கள் இயக்கத்தில் தடை ஏற்படுத்துகின்றனர்.