உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு

மயானத்தில் இல்லை வசதிகள்; இறுதி சடங்கின்போது தவிப்பு

நத்தம், :நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி மயானத்தில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இறுதி சடங்குகளை செய்ய முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டியில் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஊருக்கு அருகே ஒரு கி.மீ., துாரத்தில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்ல அமைக்கப்பட்ட சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும்போது பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் நிலை உள்ளது.மயானத்தில் மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக நீர் மாலை எடுக்கப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் நீர் நிரப்பப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இன்னல்களை சந்திக்கிறோம்

பி. ஆண்டிச்சாமி, விவசாயி, மூங்கில்பட்டி: மூங்கில்பட்டி பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் பெரிய கிராமம் ஆகும். பல ஆண்டுகளாக மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இறுதி சடங்கை கூட செய்ய முடியாது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். மயான அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை வைத்தும் யாரும் செவி சாய்க்காதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

மின் வசதி இல்லை

ஏ.அப்துல் காதர் அம்பலம், தொழிலதிபர், நத்தம்: மயானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விபரீதங்கள் நிகழும் முன் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் வசதி இல்லாமல் மக்கள் அவதி அடைகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

எங்கும் சீமை கருவேலம்

கோபிநாத், பா.ஜ., தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர், மூங்கில்பட்டி: மூங்கில்பட்டி மயானத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானத்திற்குள் எங்கு பார்த்தாலும் சீமை கருவேலம் ஆக்கிரமித்துள்ளது. இறுதிச் சடங்குகள் செய்ய தண்ணீர் வசதியும் இல்லை. மின்சார வசதியும் இல்லை. உறவினர்களை இழந்து பெரும் சோகத்துடன் வரும் மக்களுக்கு இறுதிச் சடங்கை கூட செய்ய பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை