சீரமைத்தும் நோ யூஸ்; அரசு நிதியை வீணடிக்கும் நெடுஞ்சாலை
திண்டுக்கல்: திண்டுக்கல் கரூர்ரோடு ரயில்வே சுரங்கபாதையில் ஏற்பட்டுள்ள சேதத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க மீண்டும் பள்ளங்கள் உருவாகி உள்ளது. சீரமைத்த மறு நாளே கரடுமுரடாக இவ்வழியே பயணிப்போர் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.திண்டுக்கல் கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில் மழை நேரங்கள் மட்டுமில்லாமல் எப்போதும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். தண்ணீர் தேங்குவது திண்டுக்கல் மக்களின் பேசும் பிரச்னையாக உள்ளநிலையில் பாலத்தில் எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. திட்டமிடல் தவறாக இருந்தாலும் அமைத்த பாலமாவது தரமாக இருக்க வேண்டாமா என துறை அதிகாரிகளை மக்கள் வசைபாடுகின்றனர். சேதமான பள்ளங்கள் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேல் அதிகாரிகளிடமிருந்த தப்பிப்பதற்காக உடனே பள்ளத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். தரமற்ற சீரமைப்பு பணியால் சீரமைத்த மறு நாளே சிமென்ட் பூச்சுகள் பெயந்து மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு அதிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவ்வழித்தடத்தில் கரூர்,வேடசந்துார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். மீண்டும் மேல் அதிகாரிகள் யாராவது நடவடிக்கைக்கு வலியுறுத்தினால் மட்டும் அத்தி பூத்தது போல் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் அரசு நிதிதான் வீணடிக்கப்பட்டு வருகிறது . நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இனியாவது கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில் கண்துடைப்பு பணிகள் செய்வதை விட்டு நிரந்தர தீர்வுக்கு வழிகாண வேண்டும். விரைவில் நிரந்தர தீர்வு
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் லட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில் தேங்கும் தண்ணீரை அடிக்கடி மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி கொண்டு தான் இருக்கிறோம். தண்ணீர் எப்போதும் தேங்கியே இருப்பதால் பல பகுதிகளில் பள்ளம் ஏற்படுகிறது. மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நிரந்தரமாக தீர்வு காணப்படும் என்றார்.