திண்டுக்கல்: ''ஓட்டு சாவடிகளில் மற்ற கட்சிகளை விட கூடுதலாக 300 ஓட்டுகள் பெற்றால் ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்,'' என,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.திண்டுக்கல்லில் இண்டியா கூட்டணி மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நடந்த திண்டுக்கல் சட்டசபை தொகுதி இண்டியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் தி.மு.க., சிறுபான்மையினருக்கு தொகுதிகளை வாரி வழங்கியுள்ளது. திண்டுக்கல்லிலும் தொடர்ந்து 3 முறை சிறுபான்மையினரை நகராட்சி தலைவர்களாக்கி அழகு பார்த்தோம். நம்முடைய பிரசாரம் ஒவ்வொரு வீடுகளிலும் எதிரொலிக்க வேண்டும். தேர்தலுக்கு பின் அ.தி.மு.க., என்னவாகும் என்று தெரியாது. தேர்தல் பணியில் கட்சி நிர்வாகிகள் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்ற வேண்டும். 300 ஓட்டுகள் கூடுதலாக பெறும் ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுக்கு பெரிய பரிசுகள் வழங்கப்படும் என்றார்.உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய மார்ச் 24ல் அமைச்சர் உதயநிதி திண்டுக்கல் வருகிறார். கூட்டணி கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சாதனைகள்,வாக்குறுதிகளை எடுத்து கூறி மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல்,டீசல் விலை குறையும். 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ.,செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் நாகராஜன்,ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை,நெடுஞ்செழியன், மாநகர பொருளாளர் சரவணன், காங்., மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராகவன், முன்னாள் எம்.எல்.ஏ.,பாலபாரதி,மா.கம்யூ., செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாநகர செயலாளர் அரபுமுகமது, வி.சி.க.,மாவட்ட செயலாளர் மைதீன்பாவா பங்கேற்றனர்.