திண்டுக்கல்: ஹிந்து அறநிலையத்துறை சார்பில் பழநியில் ஆக.24ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்க உள்ளது.ஆக. 24, 25 என இருநாட்கள் பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் நடக்கும் இந்த மாநாட்டில் கட்டுரை, ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் சிறப்புகளை சொல்லும் கண்காட்சிகள், 3டி தொழில்நுட்பத்துடனான முருகன் பக்தி பாடல்கள் காட்சி அரங்கம், முருகன் அடியார் பெயர்களில் விருது வழங்கும் விழா, ஆன்மிக சொற்பொழிவுகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.ஆக. 24 காலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., ஐ.பி. செந்தில்குமார் முன்னிலையில் மாநாடு துவக்க விழா நடக்கிறது.திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர், செங்கோல், சிரவை, திருப்பாதிரிப்புலியூர், தருமபுரம், மதுரை, பொம்மபுரம், திருப்பனந்தாள், சூரியனார்கோயில், வேளாக்குறிச்சி ஆதினங்கள், சமய பெரியோர், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர்.மாநாட்டின் நிறைவு நாளில் 15 பேருக்கு நீதிபதி வேல்முருகன் விருதுகளை வழங்குகிறார்.