| ADDED : ஏப் 18, 2024 12:50 AM
திண்டுக்கல்:சிவில் சர்வீசஸ் தேர்வில்திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்த்த 3 பேர் தேர்வாகி உள்ளனர்.மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. 2023 செப்டம்பரில் நடந்த முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 1016 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்.திண்டுக்கல் நாகல்நகர் பகுதியைச் சேர்ந்த சுபதர்ஷினி அகில இந்திய அளவில் 83வது இடத்தை பிடித்துள்ளார். பழநி அடிவாரம் மதனபுரத்தைச் சேர்ந்த ஓவியா 796வது இடம், திண்டுக்கல் மாசிலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் ஹூசைன் 845ம் இடத்தை பிடித்துள்ளார்.சுபதர்ஷினி கூறுகையில், ''மருத்துவபடிப்பு முடித்திருக்கிறேன். 8 ஆண்டுகளாக முயற்சி செய்து 7வது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன். சிவில் சர்வீசஸ் எனதுகனவு. பெற்றோரின் ஒத்துழைப்போடு ஆன்லைன் வாயிலாகவே படிப்புகள், வகுப்புகளை தேர்ந்தெடுத்து படித்து தற்போது தேர்வாகியிருக்கிறேன்' என்றார்.ஓவியா கூறுகையில், ''வேளாண்மை பட்டப்படிப்பு முடித்து விட்டு 2018ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன். 4வது முயற்சியில் தேர்வாகி உள்ளேன்'' என்றார்.ஆஷிக் ஹூசைன் கூறுகையில், 'மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகினேன். நீண்ட முயற்சிக்குப்பின் 4வது முயற்சியில் தேர்வாகியிருக்கிறேன்'' என்றார்.