| ADDED : மே 24, 2024 03:35 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.திண்டுக்கல் தொகுதி ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள்ரெட்டியார் சத்திரம் அண்ணா பல்கலை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. பதிவான ஓட்டுக்களை சட்டசபை தொகுதி வாரியாக பழநி 24 , ஒட்டன்சத்திரம் 21 , ஆத்துார் 23 , நிலக்கோட்டை 20, நத்தம் 24, திண்டுக்கல் 21 சுற்றுகளில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் என 84 அமைக்கப்படவுள்ளது. இதன் பணியில் 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண்பார்வையாளர்கள் 102, கண்காணிப்பாளர்கள் 102, உதவியாளர்கள் 102, அலுவலக உதவியாளர்கள் 102 என 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.ஜூன் 4 காலை 6 :00மணிக்கு ஓட்டு எண்ணும் மையங்களில் அடையாள அட்டையுடன் ஆஜராக வேண்டும். இவர்களுக்கான தொகுதி ஒதுக்கீடு பணி நியமன உத்தரவு ஜூன் 3ல் வழங்கப்படும்.காலை 7:55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் ஓட்டுப்பதிவு ரகசியம் உறுதிமொழி ஏற்க வேண்டும். 8:30 க்கு தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் மேற்கொள்ளப்படும்.