ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
பழநி : பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.பழநி அண்ணா நகரில் பாலாஜி கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தை பேறு பெற கடலுாரை சேர்ந்த நடராஜன் 42, கோமதி 38, தம்பதியினர் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று காலையில் கோமதிக்கு பிரசவம் நடைபெற்றது. இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்தது. மருத்துவமனை இயக்குனர் செந்தாமரைச்செல்வி கூறும் போது, நடராஜன்- கோமதி தம்பதியினருக்கு 15 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. பல மருத்துவமனைகளில் குழந்தை பேறு சிகிச்சை பெற்று பலன் அளிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இங்கு சிகிச்சை பெற வந்தனர். செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் கருவுற்ற கோமதிக்கு மூன்று குழந்தை இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோரிடம் தெரிவித்த போது மூன்று குழந்தைகளையும் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்'' என்றார்.