19ம் நுாற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டு கண்டெடுப்பு
ஆயக்குடி: ''பழநி ஆயக்குடி பகுதியில் 19ஆம் நுாற்றாண்டு சுமை தாங்கி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதாக'' தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார். பழநியில் அவர் கூறியதாவது: பழநி அருங்காட்சியகம், மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லுாரி வரலாற்று மாணவர்கள் இணைந்து தொல்லியல் வரலாறு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. கடைசி நாளான நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கி.பி., 19 ம் நுாற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டை கல்லுாரி மாணவர்கள் கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு வயல்வெளியில் ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகே உள்ளது. கல்வெட்டில் 15 வரிகள் உள்ளன. கலியுக சகாப்தம் 4955 ஆண்டு தை மாதம் 12 ம் தேதி அன்று சுமைதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையான ஆங்கில தேதி 1985 ஜன., 24 ஆகும். இதில் ஆயக்குடி சேர்ந்த பொன்னைய மணியக்காரர் மகன் விஸ்வநாத மணியகாருடைய மனைவி கோதை அம்மாள், தேவலோகப் பிரார்த்தி அடைந்து விட்டதால் அவரது நினைவாக சுமைதாங்கி அமைக்கப்பட்டுள்ளது என பொறிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பிரசவத்திற்கு முன்பு அல்லது பிரசவ காலத்தில் பிரசவிக்க முடியாமல் இறந்துவிட்டால் அவர்கள் நினைவாக சுமைதாங்கிகள் அமைக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை. சென்ற நுாற்றாண்டில் பிரசவத்தில் இறந்து போன ஆயக்குடி ஜமினின் மனைவி தெய்வமகளுக்கு சொந்தமான சுமைதாங்கி கண்டறியப்பட்டுள்ளது. இது இரண்டாவது அரிய வகை சுமை தாங்கி ஆகும் என்றார். பழநி அருங்காட்சியக காப்பாளர் சசிகலா, பேராசிரியர் கன்னிமுத்து உடன் இருந்தனர்.