அரசு வேலை,பள்ளிக்கு அங்கீகாரம் வாங்கி தருவதாக இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி சென்னை ஜவுளி வியாபாரி கைது
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் வாலிபருக்கு பொதுப்பணித்துறையில் அரசு வேலை,தனியார் குழந்தைகள் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வாங்கி தருவதாக இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் ரவுண்ட்ரோடை சேர்ந்த வாலிபர் முகமது மர்ஜித்26. இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். சென்னை சீதக்காதி நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி முகமதுசகாப்தின்58. இவர் அடிக்கடி திண்டுக்கல்லுக்கு ஜவுளி வியாபாரத்திற்காக வந்தார். அப்போது முகமதுமர்ஜித்துக்கும்,முகமது சகாப்தினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2022 ல் முகமதுசகாப்தின் தனக்கு அரசு அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. பணம் கொடுத்தால் நான் உனக்கு பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணி வாங்கி தருகிறேன் என முகமது மர்ஜித்திடம் கூறினார். இதை உண்மை என நம்பிய முகமது மர்ஜித் ரூ.2.50 லட்சத்தை முகமதுசகாப்தினிடம் கொடுத்தார். இதேபோல் திண்டுக்கல் ரவுண்ட்ரோடை சேர்ந்த ரபீக்35. இவர் திண்டுக்கல்லில் தனியார் குழந்தைகள் பள்ளிநடத்துகிறார். இவரிடமும் முகமது சகாப்தின்,உங்கள் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருகிறேன் எனக்கூறி ரூ.3.50 லட்சம் பெற்றமோசடியில் ஈடுபட்டார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் முகமது சகாப்தினிடம் தங்கள் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால்அவர் காலம் தாழ்த்தி வந்தார்.திண்டுக்கல் வந்த முகமது சகாப்தினை,பணம் கொடுத்து ஏமாந்த முகமது மர்ஜித்,ரபீக் இருவரும்பிடித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,சரத்குமார் உள்ளிட்ட போலீசார் முகமதுசகாப்தினை,கைது செய்து விசாரிக்கின்றனர்.