உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடிப்படை கட்டமைப்பின்றி கொடை அரசு கல்லுாரி

அடிப்படை கட்டமைப்பின்றி கொடை அரசு கல்லுாரி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செயல்படும் அரசு கலை, அறிவியல் மகளிர் கல்லுாரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மாட்டு கொட்டகை போன்ற இடத்தில் செயல்படும் உணவு கூடத்தால் மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.கொடைக்கானல் அட்டுவம்பட்டி அரசு கலை, அறிவியல் மகளிர் கல்லுாரியில் 600 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். மாணவிகளுக்கு முறையான விடுதி வசதி இல்லை. இதை பயன்படுத்தி கல்லுாரி நுாலகத்தை முறைகேடான வகையில் சில ஆண்டுகளாக விடுதியாக நடத்தியது தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கு கல்லுாரி நிர்வாகமும் ஒத்துழைப்பு அளித்துள்ளது. இங்குள்ள விரிவுரையாளர்கள், இதரப்பணியாளர்கள் இதுகுறித்து புகார்களை உயர்கல்வித்துறை அலுவலகத்திற்கு அனுப்பினர். இதையடுத்து கல்லுாரி ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அறிவுரைப்படி சில நாட்களுக்கு முன் கல்லுாரியில் ஆய்வு நடந்தது. இதில் கல்லுாரியில் உள்ள நுாலகத்தில் அனுமதியின்றி விடுதி செயல்பட்ட விபரத்தை கண்டறிந்தனர். விடுதிக்குண்டான அடிப்படை கட்டமைப்புகளின்றி, பாதுகாப்பற்ற சூழலில் நடந்த விடுதியை மூட உத்தரவிட்டு மாணவிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தப்பட்டது. மாதம் தோறும் 70-க்கு மேற்பட்ட மாணவிகளிடம் கணிசமான தொகை பெற்று கொண்டு அவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதும் தெரிய வந்தது. மேலும் மாணவிகள் கல்லுாரிக்கு வீட்டிலிருந்து வரும் மதிய உணவு சாப்பிடும் பகுதி கால்நடைகளை பராமரிக்கும் மாட்டுக் கொட்டகை போன்றிருந்துள்ளது.கொடைக்கானல் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த இந்த விதிமீறல்களை தனிக்குழு அமைத்து விசாரிக்கும் பட்சத்தில் மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என பெற்றோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை