உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரிக்காலியில் முட்களால் மூடப்பட்ட சுப்பா செட்டி குளம்

கரிக்காலியில் முட்களால் மூடப்பட்ட சுப்பா செட்டி குளம்

குஜிலியம்பாறை: கரிக்காலி ஊராட்சியில் 70 ஏக்கரில் உள்ள சுப்பாசெட்டிகுளம் கருவேல முட்களால் மூடப்பட்டுள்ளதால் முட்களை அகற்றி குளத்தை துார்வார மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலி ஊராட்சியில் கரிக்காலி, கோமுட்டிபட்டி,கன்னிமேக்கிபட்டி உள்ளிட்ட 17 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் மட்டும் எங்கும் இல்லாத அளவாக 13 குளங்கள் உள்ளன. இங்குள்ள சுப்பாசெட்டி குளம் 70 ஏக்கரில் உள்ளது. இந்த குளம் அருகில் உள்ள பெருமாள் மலைப் பகுதியில் இருந்து வரும் மழை நீரால் அவ்வப்போது நிறையும். குளம் நிறைந்தால் கோமுட்டிபட்டி, கரிக்காலி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாது. விவசாய கிணறு, போர்வெல்களிலும் போதிய நீர் ஆதாரம் கிடைப்பதால் குடிநீர் பிரச்னையின்றி மக்கள் உள்ளனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு துார்வரப்பட்டதாகும். குளத்தின் கரையோரத்தில் தண்ணீர் தேங்கிய பகுதி தவிர ஏனைய பகுதி கருவேல முட்களால் மூடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக கருவேல முட்கள் அகற்றப்படாததால் பெரும்பாலான இடங்களில் கருவேல மரமாக வளர்ந்து விட்டன. இவற்றை அகற்றி முறையாக துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முறையாக துார் வாருங்க

எம்.சுப்பிரமணி, விவசாயி, இச்சிக்கிணத்துப்பட்டி: இக் குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் போர்வெல்களில் தண்ணீர் பிரச்னை இருக்காது. இதேபோல் சுற்றுப்பகுதி மக்களுக்கான குடிநீர் பிரச்னையும் இருக்காது. தற்போது போதிய மழை இல்லாததால் இந்த குளத்திற்கு நீர் வரத்து இல்லை. சிறிதளவு மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் வற்றிய பிறகு கருவேல முட்களை அகற்றி குளத்தை முறையாக துார் வார வேண்டும்.

பங்களிப்பு மிக முக்கியம்

டி. ராஜா, தி.மு.க., நிர்வாகி, கரிக்காலி: சுப்பா செட்டிகுளம், லட்சுமணன் குளம், பிரபகவுண்டன் குளம் உள்ளிட்டவை முட்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த குளங்களை முறையாக துார்வாரி கரையை பலப்படுத்தினால் கூடுதல் நீர் தேக்கி வைக்கலாம். இப்பகுதி மக்களுக்கான விவசாயம் ,குடிநீர் தேவைகளுக்கு குளத்தின் பங்களிப்பு மிக முக்கியதேவையாக உள்ளது. குளங்களை முறையாக துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.

தேவை தனியார் பங்களிப்பு

ஆர்.ஜெயமணி, ஊராட்சி தலைவர், கரிக்காலி ஊராட்சி: ஊராட்சியில் உள்ள 13 குளங்களில் மாணிக்கம்குளம், வள்ளிகுளம், ராம்ரெட் குளம் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் நீர்வடிப் பகுதி மூலமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள சுப்பாசெட்டிகுளம், லட்சுமணன்குளம், பிரபகவுண்டன் குளம் ஆகிய மூன்று குளங்கள் மட்டுமே துார் வராமல் உள்ளது. இதனால் கருவேல முட்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த குளங்களையும் முறையாக துார்வார தனியார் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ