தரைப்பாலத்தில் மீண்டும் உடைப்பு; பஸ் சேவை நிறுத்தம்
வடமதுரை: வடமதுரை அருகே பழமையான ரோடு தரைப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.பி.கொசவபட்டியில் இருந்து எட்டிகுளத்துபட்டி, பாடியூர் வழியே திண்டுக்கல்லை இணைக்கும் முக்கிய ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் பி.கொசவபட்டியில் இருந்து ஒரு கி.மீ., தொலையில் மானாவாரி நிலங்களில் சேகரமாகும் மழை நீர் ரோட்டை கடந்து மறுபக்கம் செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்னர் கற்களால் கட்டப்பட்ட தரைப் பாலம் உள்ளது. நவம்பரில் பாலத்தின் மைய பகுதி உடைந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதி சார்ந்த செங்கல் சூளை நிறுவனம் பாலம் உடைந்த பகுதிக்குள் மண்ணை கொட்டி நிரப்பிய பின்னர் பஸ் சேவை துவங்கியது. அதே நேரம் மழை நீர் மறுபக்கம் செல்வதும் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இதே பாலத்தின் மற்றொரு பகுதி உடைந்ததால் இவ்வழியே இயக்கப்படும் அரசு பஸ் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு சேதமான பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.